ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் முழு ஊதியத்தையும் நிறுவனங்கள் அளிக்க வேண்டுமென வெளியிடப்பட்டிருந்த அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில், நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 25 - ஆம் தேதி முதல் மே 17 - ம் தேதி வரை 54 நாட்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய அவசியம் நிறுவனங்களுக்கு கிடையாது என தெளிவுபடுத்தி உள்ளது.
இரு தரப்பினரும் எழுத்துப் பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். மேலும், ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதற்கான உத்தரவை மீறியதற்காக உரிமையாளர்களுக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்திருந்த ஆணையை வரும்12 -ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.