மகாராஷ்டிரத்தில் நிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரபிக் கடலில் உருவான நிசர்க்கா புயல் வியாழன் பிற்பகலில் மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் கரையைக் கடந்தது.
அப்போது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது. புயலின்போது ரத்தினகிரி, ராய்காட், மும்பை, தானே, பால்கர், புனே மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். எனினும் புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்தனர்.
ராய்காட் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவரும், மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒருவரும் உயிரிழந்தனர். ரத்தினகிரி மாவட்டம்தில் ஒருவரும், புனேயில் ஒருவரும் உயிரிழந்தனர்.