நிசர்கா புயலால் பெரும் சேதம் இன்றி மும்பை தப்பிய போதும் 3 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவான நிசர்க்கா புயல் வடகிழக்குத் திசையில் நகர்ந்து நேற்று பிற்பகல் மும்பைக்குத் தெற்கே உள்ள ராய்காட் மாவட்டத்தில் கரையைக் கடந்தது. அலிபாக், பான்வெல், மும்பை வழியே வடகிழக்கு நோக்கிச் சென்ற இந்தத் தீவிரப் புயலால் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது.
மும்பை மற்றும் குஜராத் கடலோரம் வசித்த சுமார் ஒருலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் ராய்கட், பால்கர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் கடலோர மாவட்டங்களில் வீடுகளில் மின்சாரம், தொலைத் தொடர்பு போன்ற சேவைகள் துண்டிக்கப்பட்டன .கூரை வீடுகளும் தகடுகளும் காற்றில் பறந்தன. மரங்கள் விழுந்து கார்கள் நசுங்கிய புயலின் கோரத் தாண்டவ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ராய்காட்டில் ஒருவரும் புனே மாவட்டத்தில் இரண்டு பேரும் மின்சாரம் தாக்கியும் புயல் பாதிப்பாலும் உயிரிழந்தனர். விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு முன்னிரவில் மும்பையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
நிசர்கா புயல் வலுவிழந்த நிலையில் நாசிக்கை நோக்கி நகர்ந்து விட்டது இதனால் நாசிக், புனே உள்ளிட்ட இடங்களில் ஓரிரு நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.