அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்க்கா புயல் இன்று பிற்பகலில் மகாராஷ்டிரத்தின் அலிபாக் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்க்கா தீவிரப்புயலாக மாறி இன்று காலை எட்டரை மணி நிலவரப்படி அலிபாக் நகருக்குத் தென்மேற்கே 130கிலோமீட்டர் தொலைவிலும், மும்பைக்குத் தென்மேற்கே 175 கிலோமீட்டர் தொலைவிலும் இருந்தது. இது அடுத்த 6 மணி நேரத்துக்கு மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்குத் திசையை நோக்கி நகர்ந்து இன்று பிற்பகல் அலிபாக் அருகே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
புயலின் காரணமாக ராய்காட், மும்பை, தானே மாவட்டங்களில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், குஜராத்தின் வல்சாட், நவசாரி மாவட்டங்களில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும் எனத் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது கடல் அலைகள் வழக்கத்தைவிட ஒன்றரை மீட்டர் வரை உயரும் என்பதால் தாழ்வான பகுதிகளில் குடியிருந்தவர்கள் பாதுகாப்பான வேறிடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ராய்காட் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையை நெருங்கி வருவதால் ராய்காட் மாவட்டத்தில் அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது.