கொரோனாவால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மும்பையை தற்போது நிஷர்கா புயலும் மிரட்டுகிறது.
இந்திய கடல் பகுதியில் கடந்த 15 நாள்களுக்குள் உருவான இரண்டாவது புயல் இது. வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் மே 20 - ந் தேதி மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது. அம்பன் புயலுக்கு 99 பேர் பலியாகினர்.
தற்போது, அரபிக்கடலில் உருவாகியுள்ள நிஷர்கா புயல் மும்பையை தாக்கப் போகிறது. மும்பையிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது இந்த புயல் நிலை கொண்டுள்ளது. ஜூன் 3- ந் தேதி மாலையில் நிஷர்கா புயல் மும்பையிலிருந்து 94 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அலிபாக் அருகே கடக்கவுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். தொடர் மழையும் பெய்யும். இதனால், மும்பை, தானே, பால்கர், ராய்கட் நகரங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சிந்துதுர்க், ரத்னகிரி மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஸ்டிரா அரசு உச்க்கட்ட அலெர்ட்டில் உள்ளது. 10 பேரிடர் மேலாண்மை குழுவினரும் மகாராஸ்டிராவில் தயார் நிலையில் உள்ளனர். மும்பையில் மட்டும் 3 மேலாண்மை பேரிடர் குழுவினர் முகாமிட்டுள்ளனர். மகாராஸ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
மும்பை நகர வரலாற்றில்,புயல்கள் அந்த நகரை தாக்கியதில்லை. அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் ஓமன் நாட்டை நோக்கியோ அல்லது வடக்கு நோக்கி நகர்ந்து குஜராத் மாநிலத்தை தாக்குவதே வழக்கம். 2017- ம் ஆ்ண்டு உருவான வாயு புயல் அப்படித்தான் குஜராத் நோக்கி நகர்ந்து அங்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. இதே ஆண்டில் ஒக்கி புயல் மும்பையை நோக்கி நகர்ந்தது. ஆனால், கரையை கடக்கும் நேரத்தில் வலுவிழந்து போனது. இதற்கு முன், கடந்த 1891-ம் ஆண்டு மும்பையை புயல் தாக்கியது. 129 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மற்றோரு புயல் மும்பையை நோக்கி நகர்ந்து வருகிறது.