அரபிக் கடலில் நாளை புயல் கரையைக் கடக்க இருப்பதால், மத்திய- மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு செல்வதற்காக பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்
நிசர்கா புயலால் சேதத்தை தவிர்ப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் மீட்பு படை, வானிலை மையம், கடலோர காவற்படை ஆகியவற்றை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.முதலமைச்சர்கள் உத்தவ் தாக்கரே, விஜய் ரூபானி ஆகியோரிடம் காணொலியில் அமித் ஷா, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசின் உதவிகள் குறித்தும் விவாதித்தார்.
இந்த நிலையில் புயல் கரையைக் கடக்கும் போது வடக்கு மற்றும் தெற்கு கோவா கடல் பகுதியில் 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும் என்பதால் கடலோரத்தில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடற்கரையில் எச்சரிக்கைக் கொடிகளும் நடப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் பாதிப்புகளை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 அணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் நெருக்கடியை அம்மாநில அரசு எதிர்கொண்டுள்ள நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநேரத்தில் மின்சாரம் வழங்குவதில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலோர பால்கர் மற்றும் ராய்காட் மாவட்டங்களில் அமைந்துள்ள இரசாயன மற்றும் அணுசக்தி ஆலைகளைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயலைத் தொடர்ந்து மும்பை நகரம், மும்பை புறநகர் மாவட்டம், தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.