வந்தேபாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இதை குறிப்பிட்டுள்ள அவர், மத்திய அரசு அறிவித்துள்ள 5 ஆம் கட்ட ஊரடங்கு காலகட்டத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 50 முதல் 60சதவிகிதம் வரை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மேலும் கூடுதலாக விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரதமரின் சுயசார்புத் திட்டத்தில் விமானப் போக்குவரத்து துறையும் முக்கிய பங்காற்றும் வகையில், புதிய வழித்தடங்களிலும், அதிக விமான நிலையங்களிலும் தனியார் விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.