துணை ராணுவப் படை கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படாத ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட துணை ராணுவப் படையினரின் பயன்பாட்டுக்காக நாடு முழுவதும் கேன்டீன்கள் உள்ளன. இவற்றில் உணவுப் பொருட்கள், அன்றாடத் தேவைப் பொருட்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், மின்னணுக் கருவிகள் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு இரண்டாயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விற்பனையாகின்றன. இந்நிலையில் இந்தியப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க ஜூன் 1 முதல் துணை ராணுவப் படை கேன்டீன்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டது.