நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முந்தைய கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துக் கொள்ளலாம் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகள் அதிகளவில் இருக்கும் பாதிப்பு மிக்க பகுதிகளே கட்டுப்படுத்தப்பட்ட சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன.
அதன் அருகில் உள்ள பகுதிகளையும் கட்டுப்பாடுடைய பகுதிகளாக அறிவிக்க வேண்டுமா என்பதை அந்தந்த பகுதி அதிகாரிகளே முடிவு செய்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக மும்பையில் 660 பகுதிகள் கட்டுப்பாடு மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லியிலும் கொல்கத்தாவிலும் சென்னையிலும் நூற்றுக்கணக்கான பகுதிகள் கட்டுப்பாடு பகுதிகளாக உள்ளன. இந்த பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துகள் போன்றவை மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. அந்தப் பகுதிகளில் வசிப்போர் வெளியே நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.