ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 15 இடங்களில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய வேளாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் 8 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 2 மாவட்டங்களிலும் பூச்சிக்கொல்லி தெளித்ததாகத் தெரிவித்துள்ளது. இதைத் தவிர மத்தியப் பிரதேச மாநில வேளாண்துறை சார்பில் 5 மாவட்டங்களில் பூச்சிக்கொல்லி தெளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 6 மாநிலங்களில் மொத்தம் 377 இடங்களில் 54ஆயிரம் எக்டேர் பரப்பில் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்காகப் பூச்சிக் கொல்லி தெளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. வெட்டுக்கிளிகளை அழிக்கும் நடவடிக்கைக்காகத் தெளிப்பான்கள் பொருத்திய டிராக்டர்கள், தண்ணீர் டேங்கர்களை மாநிலம் தாண்டிக் கொண்டுசெல்வதற்கு அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.