கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடி வருவதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் இரண்டாவது 5 ஆண்டுக்காலத்தின் சோதனையான காலமாக இந்த முதல் ஆண்டு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதுகுறித்து நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி எழுதிய பகிரங்க மடலில், மிகக்கடுமையான துன்பங்களை அனுபவித்த நிலையிலும் மக்கள் தங்கள் பேரழிவை தவிர்த்து இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
கூட்டு பலமும் ஒற்றுமையும் இந்தியாவின் ஈடு இணையில்லாத அடிப்படையாகும் என்பதை நீங்கள் நிருபீத்துள்ளீர்கள் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். உலகின் பலம் வாய்ந்த செல்வந்தர் நாடுகள் கூட இதற்கு ஈடு இல்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள மோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், கைவினைக்கலைஞர்கள், சிறுதொழில்களில் உள்ள தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் போன்றவர்கள் மிகப்பெரிய வேதனைகளை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டுள்ள அவர், வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளையும் நடவடிக்கைகளையும் நாட்டு நலனுக்காக எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் அரசு இயந்திரம் முழு வீச்சுடன் 24 மணி நேரமும் இயங்கி வந்துள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.