ஊரடங்கின் 5ஆம் கட்டத்தில், கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தடையுத்தரவுகளை தொடர மாநில அரசுகள் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், கொரோனா பரவலின் தீவிரத்தை பொறுத்து மண்டலங்களை பிரிப்பது, தடை, தளர்வுகள் தொடர்பான விதிகளை வகுப்பது ஆகியவற்றிற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்கள் தனியார் போக்குவரத்தையும், வரம்புக்குட்பட்ட பொதுப்போக்குவரத்தையும், மால்கள், வணிக வளாகங்கள் தவிர்த்த பிற கடைகளையும், தொழிற்சாலைகளையும் அனுமதித்துள்ளன. மத்திய அரசு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை அனுமதித்துள்ளது. வரும் 31ஆம் தேதியுடன் 4ஆம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில், மத்திய-மாநில அரசுகள் அடுத்த கட்டத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளன.
மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் அனுமதித்தால், கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தடையுத்தரவுகளையும், பிற பகுதிகளில் மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் அனுமதிப்பது குறித்து மாநில அரசுகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பல சந்தைகள் செயல்பட அனுமதிப்பது, மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து வசதியை மேலும் அதிகரிப்பது, மேலும் பல வணிகச் செயல்பாடுகளை அனுமதிப்பது, சமூக இடைவெளியுடன் மதவழிபாட்டுத் தலங்களை திறப்பது, இன்னும் ஒரு மாதத்தில் பள்ளிகளை திறப்பது என மாநில அரசுகள் திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.