இந்தியா-சீனா இடையே எல்லைப்பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.
லடாக் எல்லையில் படைக்குவிப்பு அதிகரிக்கப்பட்டதால் கடந்த 25 நாட்களாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. சீனாவின் அச்சுறுத்தலால் லடாக் எல்லைவரை சாலை அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை நிறுத்தப்போவதில்லை என்றும் இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இருநாடுகளிடையேயான பதற்றத்தைத் தணிக்க, உதவத் தயார் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள இந்தியா இறையாண்மையிலும் தேசத்தின் பாதுகாப்பிலும் எந்த வித சமரசமும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, சீனாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்ப்பதில் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், தேசிய பாதுகாப்புப் பிரச்சினையில் சமரசத்திற்கு இடமே கிடையாது என்று மத்திய அரசு அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.