புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதை அடுத்து, கடந்த 41 ஆண்டுகளில் இல்லாதவகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சமூக ரீதியான பாதுகாப்பு மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை புலம் பெயர் தொழிலாளர்கள் பெறுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ESI மூலமாக புலம் பெயர் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்த வித எதிர்கால உறுதிப்பாடும் இல்லாமல் அன்றாடங் காய்ச்சிகளாக வாழும் பல லட்சம் தொழிலாளர்கள் அண்மையில் ஊரடங்கு காரணமாக தொழில் வருமானத்தை இழந்து பசியிலும் சோர்விலும் பல நூறு கிலோமீட்டர் தூரம் உள்ள சொந்த கிராமங்களுக்கு நடந்துசெல்லும் துயரக்கதைகள் அன்றாடம் ஊடகங்களில் வெளியாகின்றன.
தொழிலாளர்களை குறித்த விவரங்களை பதிவு செய்து மத்திய மாநில அரசுகள் உதவும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் உறுதி செய்துள்ளார். இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதனிடையே உத்தரப்பிரதேச அரசு சுமார் ஏழரை லட்சம் தொழிலாளர்களுக்கு ஓராண்டுக்குள் சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க உறுதியளித்துள்ளது.