திருப்பதி லட்டுவை ஆன்லைனில் ஆர்டர் செய்தும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, ஆந்திராவின் 12 மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் கடந்த திங்கட்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதல் நாளிலேயே 2 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு, அருகிலுள்ள தேவஸ்தான சேவை மையங்கள் அல்லது திருமண மண்டபங்களில் லட்டுவை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
50 ரூபாய்க்கு கோவிலில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லட்டு, கொரோனா ஊரடங்கில் பக்தர்களுக்கு பயன்படும் விதமாக தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, பெங்களூரு, ஹைதரபாத்தில் பக்தர்களுக்கு லட்டுவை வழங்குவதற்காக அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.