தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் ஒரு கிணற்றில் 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 3 பேர் பீகார், திரிபுரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் சாக்கு தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இவர்களுக்கும் வேறு யாருக்கும் முன்பகை உள்ளதா என விசாரித்ததில், அதே இடத்தில் பணியாற்றிய சஞ்சய் குமார் என்பவனும், அவன் நண்பர்களான மூவரும் இந்தக் கொலைகளைச் செய்தது தெரியவந்தது.
கொல்லப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் சஞ்சய் குமாருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அதற்குப் பழிவாங்க நினைத்த சஞ்சய் குமார், அவர்கள் வீட்டில் விருந்தின்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து விட்டான்.
அதை அருந்திய அனைவரும் மயங்கியவுடன் இழுத்துச் சென்று கிணற்றில் தள்ளிக் கொன்றுள்ளான். சஞ்சய் குமாரும் அவன் நண்பர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.