வெளிநாட்டு இந்தியர்களை மீட்பதற்கான சிறப்பு விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும் என்ற விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் உத்தரவை ஏர் இந்தியா கடைப்பிடிப்பதில்லை என அதன் விமானி ஒருவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதை ஏற்று நடு இருக்கைக்கு டிக்கெட் வழங்க கூடாது என மும்பை நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு அளித்தது. இதை ரத்து செய்யுமாறு ஏர் இந்தியா தாக்கல் செய்த மனு மீது விடுமுறை நாளான இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ. பாப்டே அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விமானத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற இயலாது என்றும், குவாரன்டைன் மட்டுமே அதற்கு மாற்று வழி என்றும் வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், கொரோனா வைரசுக்கு விமானம் என்றோ பொது வெளி என்றோ தெரியுமா என வினவினர்.
அடுத்த 10 நாட்களுக்கு மட்டும் ஏர் இந்தியா நடு இருக்கை பயணியுடன் விமானங்களை இயக்கலாம் என்றும் அதன் பின்னர் அதை காலியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.