கொரோனா தொற்று சூழலை கையாளுவதில் சென்னை உள்ளிட்ட 4 மாநகரங்கள் முன்மாதிரியாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை சீரமைக்க முனைப்பு காட்டி வரும் மத்திய அரசு, தொற்று பரவலையும் கட்டுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுடனும் நடைபெற்ற ஆலோசனைகளின் போது பகிரப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஜெய்பூர், இந்தூர் ஆகிய நகரங்கள் புதுமையான முயற்சிகளால் பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் தடுத்திருப்பதாக மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
அதே போல் பெரிய நகரங்களிலும் இறப்பு வீதம் கூடாமல் தடுக்க முடியும் என்பதற்கு சென்னை, பெங்களூரு ஆகியவை எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. தேசிய அளவில் கொரோனா இறப்பு வீதம் 3 சதவீதமாக உள்ள நிலையில், சென்னை, பெங்களூரில் இறப்பு வீதம் 1 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.