இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் சுமார் 7ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் இருந்து பல நாடுகளுக்கும் கொரோனா பரவியதில் இருந்தே இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவியது.
வெப்பநிலை கண்டறியும் சோதனை, சளி மாதிரிப் பரிசோதனை, அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தல், பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்தல், சோதனை செய்தல் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை எட்டு மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் புதிதாக ஆறாயிரத்து 977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 154 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை நாலாயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது. 57ஆயிரத்து 720 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
77 ஆயிரத்து 103 பேர் மருத்துவமனைகளிலும், தனிமை முகாம்களிலும் தங்கிச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரத்தில் 47 ஆயிரத்து 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆயிரத்து 577 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 277 ஆக உள்ளது. குஜராத்தில் 13 ஆயிரத்து 664 பேருக்கும், டெல்லியில் 12 ஆயிரத்து 910 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.