நாடு முழுவதும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்று தொடங்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அறிவித்திருந்தார். இருப்பினும் குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனைய மாநிலங்களில் விமானப்போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் ஆந்திராவில் நாளை முதலும், மேற்கு வங்கத்தில் வரும் 28ம் தேதியன்றும் விமானப்போக்குவரத்து தொடங்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விமான சேவையைத் தொடங்க மகாராஷ்டிரா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், குறைந்த அளவு விமானங்களை இயக்க அனுமதியளித்துள்ளது. கொரோனா பாதிப்பைப் பொறுத்து விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 25 விமானங்கள் மட்டுமே வந்திறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விமானங்கள் புறப்பாடு குறித்து எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
இதனிடையே, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ, ஏர் ஏசியா, ஏர் இந்தியா விமானங்கள் கடைசி நேரத்தில் தங்கள் சேவையை நிறுத்தியதால் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்புக்கு உள்ளாயினர். அகர்தலா செல்வதற்காக நேற்று இரவு விமான நிலையத்திற்கு வந்த பயணிகள், விமானம் ரத்தானதால் என்ன செய்வது எனத் தெரியாமல் காத்திருந்தனர்.
இதனிடையே விமானத்தில் செல்லும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விமானநிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கட்டாய முக கவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், தனிநபர் இடைவெளி யை கடைபிடித்தல் உள்ளிட்டவைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள் ளது. விமான நிலையத்தின் அனைத்து பணிகளும் முழுக்க முழுக்க ஆன் - லைன் முறையில் செயல்படுத்தப்படும். எனவே, உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? என்ற விவரங்களை, விமான பயணிகளே, பதிவிட வேண்டும்.
தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அறிகுறி இருந்தால் விமான பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.