அம்பன் புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி கொல்கத்தா சென்றடைந்தார். விமான நிலையத்தில் மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் மேற்குவங்க மாநிலம் சுந்தர்பன் அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்தது. இந்த புயலில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்த நிலையில், ஏராளமான மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன.
அம்பன் புயலுக்கு மேற்கு வங்கத்தில் 80 பேர் பலியாகியுள்ளனர். கொல்கத்தாவில் சாலைகள், விமான நிலையம் ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. 4 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் நாசமாகின. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களை அகற்றி சீரமைக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவைப் பொருத்தவரை உயிரிழப்பு தவிர்க்கப்பட்டாலும், கடலோர கிராமங்களைச் சேர்ந்த 44 லட்சம் பேர் அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாவட்டங்களில் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதனை தொடர்ந்து மேற்கு வங்க ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, புயல் பாதிப்புகளை சீரமைக்க மேற்கு வங்க மாநிலத்திற்கு உடனடி நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த வரும் இதே மாதத்தில், ஒடிசாவில் கோர புயலை எதிர்த்து போராடியது போல் இந்த வருடம் மேற்கு வங்கத்தில் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனக்கூறினார்.
மேற்கு வங்க மக்களுக்கு நாட்டு மக்களும் மத்திய அரசும் துணை நிற்கும் என உறுதியளித்த பிரதமர், அம்பன் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு நடத்தி கணக்கீடு செய்ய மத்திய குழு ஒன்று மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.
புயலின் கோர தாண்டவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றார். மேலும், புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டார்.
மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு பிரதமர் மோடி சென்றார்.
அம்பன் புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்ட போதிலும், கடலோர மாவட்டங்களில் உள்ள பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஒடிசாவில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மோடி ஆய்வு மேற்கொண்டனர்.