விமானங்களில் வரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
பயணிகளை விமான நிலையத்தில் இறங்கியதும் மாநில அரசு தனிமைப்படுத்துவதை மத்திய அரசு ஆதரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பாசிட்டிவ் உடைய ஒரு பயணிகூட விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் விமான நிலையத்தில் அறிகுறிகள் பரிசோதிக்கப்பட்டே விமானத்தில் ஏற்றப்படுகிறார் என்றும் அவர் விளக்கம் அளித்தார். சில மணி நேரப் பயணத்தால் கொரோனாவை பயணி பரப்பிவிடமாட்டார் என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில் பயணிகளும் பொறுப்பை உணர்ந்து தாம் பயணிக்க கூடிய பூரண உடல் நலத்துடன் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.
இதனிடையே அஸ்ஸாம் வரும் விமானப் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.