இந்தியாவில் கொரோனா நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிர் கொல்லி நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 583ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், பலியானோரின் எண்ணிக்கையையும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்க்கு 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 447ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நாட்டில் கொரோனா நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 583ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் கொரோனாவுக்கு 66 ஆயிரத்து 330 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுதவிர்த்து, 48 ஆயிரத்து 534 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 41 ஆயிரத்து 642ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் ஆயிரத்து 454ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட 2ஆவது மாநிலமான தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 967ஆகவும், பலி எண்ணிக்கை 94ஆகவும் அதிகரித்துள்ளது. 3ம் இடத்திலுள்ள குஜராத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 905ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி 773ஆக உள்ளது.
டெல்லியில் 11 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியுள்ள நிலையில், ராஜஸ்தானில் 6 ஆயிரத்தையும், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் 5 ஆயிரத்தையும், மேற்கு வங்கத்தில் 3 ஆயிரத்தையும், ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் 2 ஆயிரத்தையும் கடந்துள்ளது. பீகார், ஹரியானா, ஜம்மு- காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.