உள்நாட்டு விமான போக்குவரத்து 25ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதில் பயணம் செய்ய விரும்புவோர் ஆரோக்ய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும், முகக்கவசம், சானிடைசர் பாட்டில் ஆகியவற்றை சொந்தமாக எடுத்து வர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, டெல்லியில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்குவது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கினார். அப்போது அவர், 25ம் தேதியன்று உள்நாட்டு விமான போக்குவரத்தை பகுதியளவுக்கே தொடங்க இருப்பதாகவும், பறக்கும் நேரத்தின் அடிப்படையில் விமானங்கள் இயக்கப்படும் பாதைகள் 7ஆக வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விமான கட்டணமாக குறைந்தப்பட்ச கட்டணம், அதிகபட்ச கட்டணம் என 2 கட்டணங்களை அரசே நிர்ணயித்திருப்பதாகவும், இதன்படி டெல்லி, மும்பைக்கு குறைந்தபட்ச கட்டணம் 3 ஆயிரத்து 500 ரூபாயாகவும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.
நடு இருக்கைகளை காலியாக விட்டாலும், சமூக இடைவெளி சாத்தியமில்லை என்றும், ஆதலால் நடு இருக்கைகளும் நிரப்பப்படும் என்றும் அவர் கூறினார். புதிய நடைமுறை, ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்குமென்றும் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்