அம்பன் புயலின் கோரத் தாண்டவத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார்.
வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் மேற்குவங்க மாநிலம் சுந்தர்பன் அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்தது. இந்த புயலில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்த நிலையில், ஏராளமான மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன.
அம்பன் புயலுக்கு மேற்கு வங்கத்தில் 76 பேர் பலியாகியுள்ளனர். கொல்கத்தாவில் சாலைகள், விமான நிலையம் ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. 4லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் நாசமாகின. சாலைகளில் விழுந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களை அகற்றி சீரமைக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவைப் பொருத்தவரை உயிரிழப்பு தவிர்க்கப்பட்டாலும், கடலோர கிராமங்களைச் சேர்ந்த 44 லட்சம் பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாவட்டங்களில் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதனிடையே, புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்கிறார். காலை 11 மணியளவில் கொல்கத்தா வரும் மோடி, முதலமைச்சர் மம்தாவுடன் வான்வழியாக ஆய்வு செய்கிறார். பின்னர் சேத விவரங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். பிற்பகலில் புவனேஸ்வர் செல்லும் மோடி, ஒடிசாவில் புயல் சேத விவரங்களை நேரில் கண்டறிந்து முதலமைச்சருடன் ஆய்வு செய்ய உள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த 2 மாதங்களில் மோடி மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.