ஊரடங்கால் சரிந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த தம்மால் இயன்ற அத்தனை நிதியுதவித் திட்டங்களையும் அறிவித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர், தொழிற்துறையைப் பொறுத்தவரை பல சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும், புலம் பெயர் தொழிலாளர்கள் திரும்பி வர வேண்டும் என்பதால், அது பழைய நிலைக்கு திரும்ப சிறிது காலம் பிடிக்கும் என தெரிவித்தார். கொரோனா தொற்று அடிப்படையில் அரசு மேலும் பல பொருளாதார சலுகைத் திட்டங்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக நிர்மலா சீத்தாராமன் கூறினார்.
புலம் பெயர் தொழிலாளர் பிரச்சனை பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இடம் பெயர்ந்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவதற்கான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாக கூறினார். மாநிலங்கள் கூடுதல் கடன் பெற விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நிதிக்குழுவின் விதிகளில் உள்ளன எனவும் விளக்கம் அளித்துள்ளார்.