அம்பன் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, அனைவரின் பாதுகாப்புக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவும் அம்பன் புயல் புதன் பிற்பகலில் மேற்கு வங்கம், வங்கதேசம் ஆகியவற்றின் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயலின் பாதிப்பைக் குறைக்கச் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்கா, அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா, உள்துறை அமைச்சகம், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புயலுக்கு இலக்காகும் பகுதியில் பொதுமக்களை அப்புறப்படுத்தத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம், மீட்புப் படையினரின் தயார் நிலை ஆகியவை குறித்துப் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இது குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, அனைவரின் பாதுகாப்புக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் புயலை சமாளிப்பது குறித்து டெல்லியில் நடக்கும் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பொதுமக்களை முகாம்களுக்கு மாற்றும் போது கொரோனா சமூக இடைவெளியை எப்படி கடைப்பிடிப்பது உள்ளிட்டவை குறிதது அதில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு ஏற்கனவே தேவையான எண்ணிக்கையில் பேரிடர் மீட்புக் குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.