இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகளும் 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
தொடர் ஊரடங்கு, பலத்த கட்டுப்பாடுகள் என தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 242 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 157 பேர் உயிரிழந்த நிலையில், நாட்டின் மொத்த உயிரிழப்புகள் 3 ஆயிரத்து 029 ஆக உயர்ந்துள்ளது. 36 ஆயிரத்து 824 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 33 ஆயிரத்து 053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,198 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 11 ஆயிரத்து 379 பாதிப்புகளும், 659 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் உள்ள தமிழ்நாட்டில் 11,224 பாதிப்புகளும், டெல்லியில் 10 ஆயிரத்து 054 பாதிப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.