பிரதமரின் சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ், 5 கட்டங்களாக, சுமார் 21 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அறிவிப்புகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். 100 நாள் வேலை திட்டத்திற்காக கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாயும், பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஊரடங்கால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 5ஆவது நாளாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அப்போது, 7 முக்கிய துறைகள் தொடர்பான அறிவிப்புகளை, நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்கு இதுவரை 15 ஆயிரம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், மாநிலங்களுக்கு இதுவரை 4 ஆயிரத்து 113 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள், சோதனை கிட்களுக்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 1.08 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார் .
51 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 87 லட்சம் என் - 95 மாஸ்க்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பொது சுகாதாரத்திற்கு செலவிடப்படும் தொகை அதிகரிக்கப்படும் என்றார்.
அனைத்து மாவட்ட மருத்துவமனை களிலும் தொற்று நோய் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட சில துறைகள் தவிர்த்து மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்காக கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்த அவர், ஏற்கனவே பட்ஜெட்டில், இதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு,வேலைவாய்ப்பினை அதிகரிக்க இந்த நிதி உதவும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு சேர்க்க உதவும் ஷ்ரமிக் சிறப்பு ரெயில்களுக்கான 85 சதவீத செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதமர் மோடி 20 லட்சம் கோடி ரூபாய்க்கான சிறப்பு பொருளாதார திட்டங்களை அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், 5 கட்டங்களாக, 20 லட்சத்து 97 ஆயிரத்து 53 கோடி ரூபாய் அளவுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.
தற்போதைய சவால்கள் வலிமைமிக்க இந்தியாவை உருவாக்கும் என்றும், தனித்துவம் மிக்க இந்தியாவை மத்திய அரசின் திட்டங்கள் உருவாக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.