கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சுடன் பிரதமர் மோடி காணொலி மூலமாக கலந்துரையாடினார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் பில்கேட்சின் அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா துயர் துடைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, தனிநபர் இடைவெளி போன்ற பிரச்சினைகளையும் மோடி பில்கேட்சுடன் விவாதித்தார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் விவாதம் நடைபெற்றது.
கொரோனாவுக்கு எதிராக களத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்துவதுபற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சிகளையும் விளக்கியுள்ளார். இந்த கலந்துரையாடலில் பில்கேட்ஸ் அறக்கட்டளையின் இணை தலைவரான மெலிந்தா கேட்சும் பங்கேற்றார்.