இந்திய ரயில்வே துறை நாளை முதல் பயணிகள் ரயில் சேவையை துவங்க உள்ள நிலையில், அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று மாலை 6 மணி முதல் துவங்கியது.
கொரோனா பரவலால் கடந்த மார்ச் 22ம் தேதியுடன் பயணிகள் ரயில்சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் படிப்படியாக பயணிகள் ரயில் சேவையை துவங்க முடிவு செய்த ரயில்வே நிர்வாகம், நாளை முதல் தலைநகர் டெல்லியிலிருந்து சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு நாள்தோறும் 15 சிறப்பு ரயில்களை இருமார்க்கமாக இயக்க உள்ளது.
அதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. IRCTC அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ, செல்போன் செயலி மூலம் மட்டுமே தான் முன்பதிவு செய்ய முடியும். தட்கல் முறையில் பதிவு செய்யும் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜ்தானி விரைவு ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்புக்காக தனிமைப்படுத்திய வார்டுகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ரயில் பெட்டிகளை தவிர்த்து, மீதமுள்ள பெட்டிகளின் இருப்பை பொறுத்து ரயில் சேவை வழங்கப்பட்டு, வழித்தடங்கள் விரிவு படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மாஸ்க் அணிவதும், ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.