மகாராஷ்டிரச் சட்ட மேலவையில் 9 உறுப்பினர்களுக்கான தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவது கேள்விக் குறியாகியுள்ளது.
சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாத உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவியேற்று 6 மாதத்துக்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராகாவிட்டால் அவர் பதவியிழப்பார்.
இதனால் சட்டமேலவையின் 9 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மே 21ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பாஜக 4 வேட்பாளர்களையும், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 2 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளனர்.
இதனால் தான் போட்டியின்றித் தேர்வாக முடியாது என்பதால் காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை விலக்கிக் கொள்ள வேண்டும் என உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார். இல்லாவிட்டால் தான் போட்டியில் இருந்து விலகிவிடுவதாகவும் எச்சரித்துள்ளார்.