உரிய அனுமதி பெறாமல் யாரையும் கேரள எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவை நோக்கி வருபவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து உரிய அனுமதி பாஸ் பெற்ற பின்னரே மாநிலத்திற்குள் நுழைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கேரள மாநிலம் பாலக்காடு செல்வதற்காக நடந்து சென்ற போது கோவை வாளையாரில் உள்ள சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களை கேரளாவுக்குள் அனுப்ப அம்மாநில அரசு அனுமதிக்கவில்லை. கேரளாவில் கொரோனா தடுக்கப்பட்டு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான தொற்று பரவல் உள்ள நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் தொற்று பரவுவது அதிகரிக்கும் என கருதி கேரள அரசு அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கானோர் வாளையார், வேலந்தாவளம் உள்ளிட்ட தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.