ஆரோக்கிய சேது செயலியால் கொரோனா பரவல் அதிகமாக இருந்த 300 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் கன்ட் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கிய சேது என்ற மத்திய அரசின் செயலி இல்லாமல் இருந்திருந்தால் இந்த 300 இடங்கள் அரசின் கண்களுக்குத் தப்பியிருக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் 650 ஹாட்ஸ்பாட்களை ஆரோக்கிய சேது செயலி அடையாளம் காட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 2ம் தேதி கொரோனா குறித்த விவரங்கள், தகவல்களை பதிவிடுவதற்காக பிரதமர் மோடி ஆரோக்கிய சேது செயலியை அறிமுகம் செய்துவைத்தார். இதுவரை சுமார் 9 கோடியே 60 லட்சம் பேர் இதில் தங்கள் மொபைல் எண்ணை அளித்து பதிவு செய்துள்ளனர்.
உடனுக்குடன் கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒருகிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொரோனா பாதிப்பு விவரங்களையும் இச்செயலி வழங்குகிறது.