கொரோனா விவகாரத்தால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாகப் பெற உள்ளது.
ஏற்றுமதி வரிகள், ஜிஎஸ்டி வரிகள், மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் பெருமளவுக்கு குறைந்துள்ளன. இதனால் வருடாந்திர நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.2020-21 பட்ஜெட்டின் நிதிப்பற்றாக்குறை ஏழு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டிருந்தது.
சந்தைகளில் இருந்து கடனாக இத்தொகையை மத்திய அரசு பெறுவது வழக்கம். தற்போது இந்த கடன்தொகை 12 லட்சம் கோடி ரூபாயாக உயரும். இதனால் நிதிப்பற்றாக்குறை 3 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 5 புள்ளி 5 சதவீதமாக உயர உள்ளது. மே 11 முதல் 20 வாரங்களில் மத்திய அரசு வாரந்தோறும் தனது கையிருப்பில் உள்ள கடன் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாயை சந்தைகள் மூலமாக பெற உள்ளதாக ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.