கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 359 இந்தியர்கள் இரு விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா பாதிப்பினால் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர விமானங்கள் மற்றும் கப்பற்படைக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏர் இந்தியாவின் இரண்டு சிறப்பு விமானங்கள் துபாயிலிருந்து இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தன. முதலில் வந்த விமானத்தில் 182 பேரும், இரண்டாவது விமானத்தில் 177 பேரும் வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. பின்னர், பயணிகள் 3 இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதேபோன்று பஹ்ரைன் நாட்டிலிருந்து 182 பேர் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள், தீவிர கண்காணிப்புக்குப் பின் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானதும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதேபோன்று சிங்கப்பூர், வங்கதேசம், சவூதி அரேபியாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில் மாலத்தீவில் இருந்து 698 இந்தியர்களுடன் இந்திய கடற்படையின் ஜலஸ்வா கப்பல் நேற்றிரவு புறப்பட்டது. கொச்சிக்கு கப்பல் வந்தடைந்ததும் 21 நாட்களுக்கு அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 200 பயணிகளுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு மகர் கப்பல் நாளை வந்து சேரும் என கடற்படை செய்தித் தொடர்பாளர் சுதீர் தெரிவித்துள்ளார்