விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டதால், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியேறினர்.
விசாகப்பட்டினம் கோபாலபட்டினம் பகுதியில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா என்ற ரசாயன தொழிற்சாலையில் இருந்து நேற்று அதிகாலை வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் குடியிருக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. வீடுகளை விட்டு வெளியே சென்ற பெண்களும், குழந்தைகளும் சாலைகளில் மயங்கி விழுந்தனர்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 20க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், அதே ஆலையில் நள்ளிரவு மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டதையடுத்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்தனர். அவசர உதவிகளுக்காக ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கையாக அக்கம் பக்கம் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வாகனங்கள் இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கானோர் சாலைகளில் நள்ளிரவில் நடந்தே சென்றனர்.
இதனிடையே, புதிதாக கசிவு ஏதும் இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவில் மக்களை வெளியேற்றியதற்கும் அவர்களுக்கு வாகன வசதிகள் ஏதும் செய்யாததற்கும் காவல்துறையினர் பதில் அளிக்கவில்லை.
வாயுக்கசிவு சம்பவம் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆலையில் ரசாயனக் கழிவு ஏற்படுமானால் என்ன செய்வது என்ற எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது இன்று விசாரணை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒருகோடி ரூபாய் நிவாரண உதவியை அறிவித்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வாயுக்கசிவால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர்