சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில், மார்ச் 25 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு சில தளர்வுகள் அளித்தாலும், பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் பேருந்து மற்றும் கார் உரிமையாளர்கள் கூட்டமைப்புடன் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்துரையாடினார். அப்போது சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படலாம் என்றார்.
பேருந்துகள், கார்களை இயக்கும் போது தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்து கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.