கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதுமுள்ள மாணவர்களுடன் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கலந்துரையாடிய அவர், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்ததோடு, நீட் மற்றும் JEE தேர்வுகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.
அதன்படி மே இறுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு, ஜூலை 26ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவித்துள்ளார்.
15 லட்சத்து 93 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவரவர் இடங்களில் உள்ள சூழலைப் பொறுத்து தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றும், JEE முதன்மை தேர்வு ஏப்ரல் மாதமும், JEE Advanced தேர்வு ஆகஸ்ட் மாதமும் நடைபெறும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.