சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமுடைய 20 நகரங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர் குழுக்களை அனுப்பி வைக்க உள்ளது.
மிகவும் தீவிரமான பாதிப்புடைய சிவப்பு மண்டல பகுதிகளுக்கு மத்திய அரசு நிபுணர் குழுக்களை அனுப்பி ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக 9 மாநிலங்களின் முக்கிய நகரங்களான சென்னை, அகமதாபாத், மும்பை , கொல்கத்தா, இந்தூர் மற்றும் டெல்லிக்கு மத்திய நிபுணர்க்குழு விரைவில் வருகை தர உள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து மாநில அரசுடன் இந்த நிபுணர்க்குழு ஆலோசனை நடத்தும். பாதிப்பு மிக்க பகுதிகளை கண்காணித்தல், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளையும் அதன் தொடர்புகளையும் கண்டறிதல், நோயாளிகளை குணப்படுத்துதல், கிருமி பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை இக்குழுவினர் மேற்பார்வையிடுவார்கள்.
இக்குழுவில் ஏய்ம்ஸ், தேசிய நோய்த் தடுப்பு மையம், ஜிப்மர் மற்றும் அகில இந்திய பொது சுகாதாரத்துறை வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் மாநில தலைமைச் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான வழிகாட்டல்களை பரிந்துரை செய்வார்கள் என்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.