லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்பி வருவதால், வரிந்து கட்டிக்கொண்டு களப்பணியாற்றத் தயாராகுமாறு அரசு அதிகாரிகளை முதலமைச்சர் நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாட்னாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நிதிஷ்குமார், பல மாநிலங்களில் இருந்து குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருவார்கள் என்பதால், அவர்களைத் தனிமைப்படுத்த ஒன்றிய அளவிலும், ஊராட்சி அளவிலும் தனிமை முகாம்களை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தனிமை முகாம்களில் மிகச் சிறந்த உணவு, தங்குமிடம், தூய்மை வசதிகள், மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ரயில்களில் திரும்பும் தொழிலாளர்களைத் தனிமை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப் போதுமான வாகன வசதிகளைச் செய்ய வேண்டும் என்றும் நிதிஷ்குமார் அறிவுறுத்தினார்.