நாடு தழுவிய ஊரடங்கு வருகிற 17ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் ரயில் சேவைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் 24ந் தேதியன்று அனைத்து பயணிகள் ரயில்சேவைகளும் நிறுத்தப்பட்டன. இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மே 3ந் தேதி வரை ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 17ந் தேதி வரை ரயில்சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும், சரக்கு மற்றும் பார்சல் ரயில் நடவடிக்கைகள் தற்போது போலவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிப்போரை அழைத்துச் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.