வரும் 3 ஆம் தேதி முடிவடையவுள்ள ஊரடங்கிற்குப் பிறகு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது ஊரடங்கிற்குப் பிறகு ரயில், விமான சேவைகளை படிப்படியாக துவக்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிவப்பு மண்டலங்கள் அல்லாத நாட்டின் பகுதிகளில் வர்த்தக-பொருளாதார நடவடிக்கைகளை துவக்கவும் அப்போது ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே வியாழன் அன்று ஒரு ஆலோசனையில் ஈடுபட்ட மோடி, வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், ஊரடங்கிற்குப் பிந்தைய பொருளாதார திட்டங்களை வகுக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.