டெல்லி - குருகிராம் எல்லையை அரியானா காவல்துறையினர் மூடியுள்ளனர். டெல்லியில் இருந்து அரியானாவுக்கு வரும் வாகனங்களைத் தடுக்கும் வகையில் குருகிராமில் உள்ள சோதனைச் சாவடி வெள்ளி காலை 10 மணி முதல் மூடப்பட்டுள்ளது.
இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றன. அனுமதிச் சீட்டைப் பரிசோதித்த காவல்துறையினர் இன்றியமையாப் பொருட்கள், இன்றியமையாப் பணிகள் ஆகியவற்றுக்கான வாகனங்களை மட்டும் அனுமதித்தனர்.
மற்ற வாகனங்கள் அனைத்தும் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டன. டெல்லியில் மொத்தமுள்ள 11 மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. அரியானாவில் 2 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும் 18 மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலத்திலும், 2 மாவட்டங்கள் பசுமை மண்டலத்திலும் உள்ளன.
எல்லையை மூடி வைத்தால் நிலைமை மேலும் முன்னேற்றமடையும் என மாநில உள்துறை மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சரான அனில் விஜ் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.