ஊரடங்கால் தொழிற்சாலைகளும், விற்பனையகங்களும் மூடப்பட்டதால் ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒரு வாகனம் கூட விற்கப்படவில்லை.
கொரோனா பரவலைத் தடுக்கத் தொழிற்சாலைகளை மூட அரசு அறிவுறுத்தியதை ஏற்று மாருதி சுசுகி நிறுவனம் தனது அனைத்துத் தொழிற்சாலைகளையும் மூடியுள்ளது. இதேபோல் மாருதி சுசுகி வாகன விற்பனையகங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனால் ஏப்ரல் மாதம் முழுவதுமே வாகன விற்பனை இல்லை. ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு விற்பனை இல்லாத அதேநேரத்தில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்குக் கப்பல்களில் 632 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. வழக்கமாக மாருதி சுசுகி நிறுவனம் மாதத்துக்கு ஒன்றரை லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.