நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில்,பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை தவிர்க்கும் வகையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் நிறைவடைய உள்ளது. சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து இதர பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்துவது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு உள்பட முக்கியப் பிரச்சினைகள் குறித்து நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
பாதுகாப்பு படையினரின் நீண்ட கால கோரிக்கைகள்,நிலக்கரி மற்றும் சுரங்கத் தொழில் , கனிமம் தாதுப் பொருட்கள் தங்குத் தடையின்றி கிடைத்தல், அந்நிய நேரடி முதலீடுகளை கவருதல், போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கால் விவசாயம், தொழில்துறை ஆகிய இருபெரும் பொருளாதார மண்டலங்களும் ஆட்டம் கண்டுள்ளன.
இப்பிரச்சினையை அமைச்சர்களுடன் விரிவாக விவாதித்த மோடி மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் வழியாக உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் இப்பிரச்சினையை ஓரளவு சமாளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
40 நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் மேலும் ஊரடங்கை அறிவித்தால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, படிப்படியாக பொருளாதாரத்தை மீட்பதற்கான வழிகளில் கவனம் செலுத்துமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.