இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதால், மே 3ம் தேதிக்கு பிறகு பாதிப்பு குறைந்த பகுதிகளில் ஊரடங்கில் அதிகளவில் தளர்வுகள் வழங்கப்படலாம் என மத்திய அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும், இதனால் நோய்க்கட்டுப்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனால் 4ம் தேதிக்கு பிறகு புதிய விதிகளுடன், ஊரடங்கில் அதிகளவில் தளர்வுகள் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், புனித பயணிகள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பவும் மத்திய அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பாதிப்பு குறைவான பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் கட்டுப்பாடுகளில் தாராளமாக தளர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.