கொரோனா தொற்று பரவி வருவதால், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக விமானங்கள், கப்பல்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
வளைகுடா பகுதிகளில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குவைத் பிரதமர் அல்-கலீத் அல்-ஹமத்தை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். தொற்றுநோயின் தாக்கம் குறித்து அப்போது இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வெளிநாட்டுத் தொழிலாளர்களை மீண்டும் அழைத்துக் கொள்ளவேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 34 லட்சம் பேர், சவுதி அரேபியாவில் 26 லட்சம் பேர் என வளைகுடா பகுதியில் உள்ள 6 நாடுகளில் ஒரு கோடியே 26 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் கணிமான பகுதியினர் துறைமுக நகரங்களில் வசித்து வருவதால் இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களை அனுப்பி தலா 1500 பேர் வீதம் என மொத்தம் 4500 பேரை அழைத்து வர வாய்ப்புள்ளது. துறைமுகங்கள் இல்லாத மற்ற பகுதிகளில் ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் கடற்படை விமானங்களை அனுப்பி, மீட்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
முதற்கட்டமாக வசதி குறைந்த தொழிலாளர்களை முன்னுரிமை அடிப்படையில் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக மாணவர்களை அழைத்து வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஏர் இந்தியா விமானம் மற்றும் கடற்படையினர் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியர்களையும் அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் 2 லட்சத்து 76 ஆயிரம் பேர் கேரளாவிற்கு திரும்புவதற்காக பதிவு செய்துள்ளனர். பல்லாயிரக்கணக்கில் வருவோரை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த திட்ட அறிக்கை ஒன்றை கேரள அரசு தயார் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது