மாநிலங்களிடையான சரக்குப் போக்குவரத்தைத் தாமதப்படுத்தவோ, அதற்குத் தடைகளை ஏற்படுத்தவோ வேண்டாம் என அனைத்து மாநிலங்களையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநிலப் போக்குவரத்து அமைச்சர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது, மாநில எல்லைகளில் தடுக்கப்பட்டிருக்கும் சரக்கு லாரிகளை உடனடியாக விடுவித்து இன்றியமையாப் பொருட்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைவதற்கு வழி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சோதனை, அனுமதிச் சீட்டு என்கிற பெயரில் மாநிலங்களிடையான எல்லைகளில் மூன்றரை லட்சம் லாரிகள் சிக்கி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
மே 3ஆம் தேதிக்குப் பின் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்குப் பின்னரே பொதுப் போக்குவரத்து தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அப்போது மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.