அரசு ஊழியர்களின் 6 நாள் ஊதியத்தை 5 மாதங்களுக்குப் பிடித்து வைக்கும் கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாதத்துக்கு 6 நாட்கள் என்கிற கணக்கில் ஏப்ரல் முதல் 5 மாதங்கள் பிடித்து வைப்பதற்குக் கேரள அரசு ஆணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து ஐஎன்டியூசி, பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அதில் அரசின் உத்தரவு, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள சொத்துரிமைக்கு எதிராக உள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கு நீதிபதி பெச்சு குரியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தைப் பிடித்து வைக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, அரசாணைக்கு 2 மாதங்களுக்குத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.